என் இனிய தமிழ் மக்களே,
இந்த பதிவு எல்லாம் எழுதி பல மாதங்கள் ஆகின்றன.என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கையில் எழுத ஒரு விஷயம் கிடைத்தது…எல்லாம் வெறும் மொக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று இப்பொழுதே சொல்லி கொள்கின்றேன்.
சரி முதலில் இருந்து என் சோக கதையை ஆரம்பிக்கின்றேன்.எனக்கு கடந்த இரு வாரங்களாக பல் வலி.ஏதோ சாதாரண பல் வலிதானே என்று நானும் விட்டு விட்டேன்.ஆனால் ஈறு வீங்கி என்னை பயமுறுத்தி விட்டது.இதை ஒரு நண்பரிடம் சொன்னால்,”நீ சரியாக பல் துலக்கி இருக்க மாட்டாய்,அதான் பல் வலி ” என்று கிண்டல் வேறு
.என் முத்து போன்ற வெண்மையான பற்களா இப்படி?அதுவும் நான் அன்றாடம் காலையும் இரவும் தவறாமல் பற்களைத் சுத்தம் செய்வேன்.என் பற்களின் மீது அவ்வளவு அக்கறை :D.சிங்கப்பூரில் பல் மருத்துவரிடம் சென்றால் கண்டிப்பாக ஒரு 100 டாலர்கள் மேலேயே ஆகும்.ஆகவே இங்கே போகவே யோசித்து கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியவில்லை.சரியாக சாப்பிடவும் தண்ணீர் அருந்தவும் முடியாமல் போயிற்று.அந்த சமயம் பார்த்து வீட்டில் சுவையான கோழி கறி,மீன் வறுவல் என்று அமர்களமாக இருந்தது.இதை எல்லாம் சாப்பிட முடியாமல் கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தது.இதற்கும் மேல் பொறுக்க முடியாது என்று தைரியமாக மருத்துவரைக் காண முடிவு செய்தேன்.சரி பக்கதிலேயே தாய் நாடான மலேசியா இருக்கையில் என்ன பயம் என்று அன்றே பல் ஜொகூர் பாருவில்(மலேசியா) உள்ள பல் மருத்துவரைப் பார்க்க சென்றுவிட்டேன்.வாயைத் திறந்ததும் எனது பற்களை எண்ண ஆரம்பித்து விட்டார் அந்த மருத்துவர்.
“அம்மாடி என்ன இது?உனக்கு கடைவாய்ப்பற்கள் 5ஐ காணோமே.மொத்த12 இருக்க வேண்டிய இடத்தில் 7 தானே இருக்கின்றது?” என்று கேள்வி கேட்டார்.
எனக்கே அவர் சொல்லிதான் 5 பற்கள் இல்லை என்று தெரிய ஆரம்பித்தது.ஹிஹி..நாந்தான் அப்பாவி சிறுமி ஆயிற்றே.ஒரு வேளை இன்னும் முளைத்து கொண்டிருக்கின்றதே என்னம்மோ..(அடிப்பாவி இப்படி பொய் சொல்லுறீயே)
“ஒரு வேளை உனக்கு இப்பொழுதுதான் பல் முளைக்கின்றதே?சரி ஊடுகதிர் படம் எடுத்து பார்த்து விடலாம்,” என்றார்.அந்த படத்தைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி.
இதுதான் அந்த ஊடுகதிர் படம்.பார்த்தால் ஒன்றுமே புரியாது என்று எனக்கும் தெரியும்.படம் சற்று தெளிவாக இல்லை.அந்த சிகப்பு வட்டத்தில் இருப்பதுதான் எனது ” ஞானப்பல்”(wisdom tooth).இந்த பற்கள் 16இல் இருந்து 25 வயதிற்குள் வளரும்.இந்த வயதுதான் ஞானம் பெறும் வயதாம்.ஆகவே இதற்குப் பெயர் ஞானப்பல்..(நல்லா வைக்குறாங்க பெயரை!).
வழக்கமாக பற்கள் கீழ் இருந்து மேல் வளரும்,எனக்கோ வலமிருந்து இடம் வளர்ந்து இருந்தது.ஆங்கிலத்தில் இதற்குப் பெயர் “horizontal impaction“.இதற்கு காரணம் பற்கள் வளர போதுமான இடம் இல்லமால் போவதுதான்.(inadequate jawbone space)
“உன் பல் என்ன படுத்து கொண்டிருக்கு” என்று அந்த பல் மருத்துவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.நான் எங்கே போனாலும் என்னை வம்பிழுக்கவே ஒரு கூட்டம் இருக்கு போல.
என் பல்லும் என்னை மாதிரியே தூங்கிட்டே இருக்கும் போல
வாயில் படுத்து தூங்கி கொண்டிருந்தது….
“இந்த பல்லைக் கண்டிப்பாக எடுத்து ஆக வேண்டும்.இதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்,” என்று மருத்துவர் பயமுறுத்தினார்.இது சற்று கடினமான அறுவை சிகிச்சைதான்.சிகிச்சை முடிந்து 1 நாளிலிருந்து ஒரு வாரம் வரை வீக்கம் இருக்கும்.சில எலும்புக்களை வெட்டி எடுக்க நேரிடும்.செலவு 400லில் இருந்து 600 ரிங்கிட் ஆகும் என்று பல அதிர்ச்சி தரும் தகவல்களை அள்ளி வீசினார்.நானே ஒரு அப்பாவி சிறுமி,ஆகவே மிகவும் பயந்து போனேன்.
ஒரு பக்கம் பல் வலி உயிரை எடுக்கின்றது.மறு வாரமோ கல்லூரி சோதனைகள் ஆரம்பம்.இந்த நிலமையில் அறுவை சிகிச்சை செய்ய சரியான நேரமில்லை என்று பட்டது.அடுத்த வாரம் இதைச் செய்து கொள்கின்றேன் என்று கூறிவிட்டு சில மருந்துக்களை வாங்கிவிட்டு கிளம்பினேன்.இப்பொழுது அந்த வீக்கம் அடைந்த பகுதிகளைத் துப்புரவாக வைத்துக் கொண்டால் அவ்வளவாக வலி இருக்காது மற்றும் வீக்கமும் சற்று குறையாலம் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
“துர்கா உனக்கு எதுக்கு அறுவை சிகிச்சை எல்லாம்?ஒரு சுத்தியல் கொடு,பல்லை உடைச்சு வெளியே எடுத்துவிடலாம்” என்று பல நண்பர்களின் கிண்டல்.”பாவிகளா…ஒரு அப்பாவி சிறுமி வலியில் துடிக்கிறேன்.இது எல்லாம் உங்களுக்குச் சிரிப்பா போச்சு இல்ல?” என்று எனது வழக்கமான புலம்பலகளுடன் நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன.அடுத்த பதிவில் எனது அறுவை சிகிச்சை அனுபவங்களோடு வருகின்றேன்
ஊருக்கே டமாரம் அடித்து இந்த செய்தியைச் சொல்லிவிட்டேன்.பதிவு மட்டும்தான் விட்டு வைத்து இருந்தேன்.இங்கும் சொல்லிவிட்டேன்
மீண்டும் சந்திப்போம்,
இப்படிக்கு,
துர்கா
மேலும் படிக்க
http://www.animated-teeth.com/wisdom_teeth/t1_wisdom_tooth.htm
http://en.wikipedia.org/wiki/Wisdom_teeth
பி.கு:எனக்கு ஞானப்பல் தேவை இல்லை ஞானம் பெற.ஏனென்றால் நான் பிறவியிலே ஒரு பெரிய்ய்ய்ய்ய்யா ஞானியாக்கும்


